முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் பெயர் எச்டி ரேவண்ணா. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பியாவார். பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார புகார் எழுந்தது. இவர் தனது எம்பி பதவியை பயன்படுத்தியும், கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தியும் பெண்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மொத்தம் 4,000 ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார புகார்கள் எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தன் மீது வழக்குகள் வரப்போகிறது என்பதை அறிந்து அவர் ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பியபோது பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணா மீது மொத்தம் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 48 வயது வேலைக்கார பெண் சார்ந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்தது.
அதாவது ஹாசன்மாவட்டம் கன்னிகடா பண்ணை வீட்டில் 48 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது அவரை மிரட்டி 2 முறை பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு பெங்களூர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீஸ் தரப்பில் 1,632 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 113 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 48 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். நாளை தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா, தாய் பவானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பெண்ணை ரேவண்ணா – பவானி ஆகியோரின் உத்தரவில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கேஆர் நகரில் உள்ள பண்ணை வீட்டில் அவரை சிஐடி போலீசார் மீட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.