Skip to content

கும்பமேளா துயர சம்பவம்: உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக  ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்தத் தகவல் இதுவரை உத்தரப் பிரதேச அரசு அல்லது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இன்னும் பல மகாஸ்நானங்கள் நடக்க உள்ளன. இன்று நடந்தது போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் அமைப்பை பலப்படுத்த வேண்டும்.

விஐபி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும், பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் பக்தர்களின் வசதியை மிக முக்கியமாகக் கருதி உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், இதனால் எதிர்கால நீராடல் சடங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக முடிக்கப்படும்.

பல நூற்றாண்டுகள் பழமையான அகாடாக்களின் அரச குளியல் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் பொறுமையுடனும் அமைதியுடனும் நீராடுமாறு கேட்டுக் கொள்கிறேன். கங்கை அன்னை அனைவரையும் காக்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.

இதுபோல  காங்கிரஸ் தலைவர்  கார்கே,  அகிலேஷ் யாதவ்,  கெஜ்ரிவால் ஆகியோரும்  இந்த  சம்பத்திற்கு  உ.பி. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

error: Content is protected !!