தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் நடைபெற உள்ள கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்ட்டினும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

