பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 ந் தேதி தமிழகம் வருகிறார். இங்கு 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். 27ந்தேதி திருவனந்தபுரத்திலிருந்து தமிழகம் வரும் பிரதமர் மோடி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர், தஞ்சையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விமானம் நேற்று திருச்சி விமான நிலைய வரலாற்றில் முதல்முறையாக விமானம் தரையிறங்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மிக நீளமான இந்த விமானம் நேற்று மதியம் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கி மீண்டும் மதியம் 2.15 மணியளவில் புதுடெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது.
பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வந்து இறங்கி இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்கிறாரா? அல்லது தஞ்சையில் இருக்கும் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் செல்கிறாரா? என்பது குறித்து பயண விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.