மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும், ஒவ்வொரு நொடியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். 1948 முதல் இப்போது வரை – பாகிஸ்தான் காஷ்மீரைத் தாக்கியபோது, நமது வீரர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
நேற்று, பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் பேசினார். ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசினார். ஆனால் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க மறந்துவிட்டார். பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது, ஏன் நடந்தது, அங்கு 26 அப்பாவி இந்தியர்கள் பட்டப்பகலில் எப்படி கொல்லப்பட்டனர் என விவாதிக்க மறந்துவிட்டார்.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தபோது, அங்கு பாதுகாப்புக்காக ஒரு ராணுவ வீரர் கூட இல்லாதது ஏன். பொதுமக்கள் மீது கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை. இதற்கு பொறுப்பேற்று புலனாய்வு அமைப்பின் தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை, உள்துறை அமைச்சர் ஏன் ராஜினாமா செய்யவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்தானே பொறுப்பு. எனவே அவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது.
பாகிஸ்தானுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், இந்தப் போர் ஏன் நின்றது?. அமெரிக்க அதிபர் ஏன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்?. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பற்றி நான் பேசுகிறேன், ஏனென்றால் அந்த வலி எனக்குத் தெரியும். பயங்கரவாதிகள் என் தந்தையைக் கொன்றபோது என் அம்மா அழுதார். இந்த அரசாங்கம் பெருமையை மட்டுமே எடுத்துக்கொள்ள விரும்புகிறது, பொறுப்பை அல்ல. இது தங்க கிரீடம் அல்ல, இது முள் கிரீடம்” என்று அவர் பேசினார்.