சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக கல்லூரி மாணவியின் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்க முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு நடந்த நிலையில், கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான பேராசிரியருக்கு கடந்த மாதம் திருமணமானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
