Skip to content

தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று அமைப்புசாரா மின் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, ஜெயபாலன், சுரேஷ், ராமசாமி, கோவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் தயாளன், கோவை மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் ரவி, புதுக்கோட்டை மாவட்டம் வீரபாண்டியன், மரியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்ய சங்கம் மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட பொருளாளர் பாரவேல், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல சங்கம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட 18 வகையான அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்புசாரா மின் பணியாளர்கள் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா மின் பணியாளர்கள் உள்ளனர் . அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என்பது இன்றிமையாதது. அத்தகைய மின்சார தொழிலின் வளர்ச்சியில்தான் மின்சார பணியாளர்களின் நலனை பேணி பாதுகாத்திட முடியும் . இருளைப் போக்கும் மின்சார பணியாளர்களின் வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்றிட மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தோம். பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே உடனடியாக தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும்.‌
மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை பகுதி 1,2, ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர், பாபநாசம் , பேராவூரணி, அம்மாபேட்டை மற்றும் திருவள்ளூர், கோவை மாவட்ட‌ ஊராட்சி ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணை செயலாளர் சிவசக்தி நன்றி கூறினார்.

error: Content is protected !!