Skip to content

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும், புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 2 முறை ஆளும் கட்சியாகவும், இதர கட்சியுடன் கூட்டணியாகவும் வென்ற அ.தி.மு.க.வுக்கு தற்போது வெறும் 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது, அக்கட்சியின் தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறுகையில், “புதுச்சேரியில் உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. கூட்டணி தர்மத்துக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் 2 தொகுதிகளை ஏற்றோம். கடந்த தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை 2 தொகுதிகளிலும் வெல்வோம். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உப்பளம் தொகுதியில் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!