புதுக்கோட்டை மன்னராக இருந்த தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் தொண்டைமான். இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் தொடர்ந்து அதிமுகவிலேயே பயணித்தார். கடந்த 10 தினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி புதுக்கோட்டை வந்தபோது கார்த்திக் தொண்டைமானும், எடப்பாடியை வரவேற்றார்.
இந்த நிலையில் இன்று அவர் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே. என். நேரு, ரகுபதி, முன்னாள் எம்.பி. அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் கார்த்திக் தொண்டைமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் ரகுபதி, முன்னாள் எம்.பி. அப்துல்லா, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கார்த்திக் தொண்டைமானின் தந்தை விஜயரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக (1977 மற்றும் 1980) 2 முறை இருந்தார்.