அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபணமானதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் இருக்கவே அன்புமணி தகுதியற்றவர் என கடுமையாக சாடியுள்ளார்.
அன்புமணியை நீக்குவது வருத்தமாக இருந்தாலும் கட்சியின் நலனுக்காக இந்த முடிவை எடுப்பதாக கூறியுள்ளார். அன்புமணியை நீக்கிய சில மணி நேரத்திலேயே, ”அன்புமணியை நீக்கி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது. ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை.
கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், செயலாளருக்கு உள்ளது” என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்து பேசிய வழக்கறிஞர் பாலு, ”பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கிறது.
அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்-க்கு இல்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் ஆவார். நான், கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர், தேர்தல் ஆணையம் முறையாக எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை. பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார், அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. அன்புமணி ராமதாஸ் உளவு பார்த்து இருந்தால் இப்படி சூழல் ஏற்பட்டிருக்காது. நாங்கள் கட்சியின் விதிகளின் படி செயல்படுகிறோம், அதிகாரமும், அங்கீகாரமும் எங்களிடம் உள்ளது. கூட்டணி குறித்து வரும் காலங்களில் அறிவிப்போம், கட்சியின் விதிப்படி யாருக்கு என்ன அதிகாரம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளார்.