தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து கோரிய வழக்கில் ரவி, மோகன் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மே 21-ம் தேதி ஆஜராகினர். இந்த வழக்கை சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி விசாரித்தார். அப்போது, தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். அதே போல், ஆர்த்தி தரப்பில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரும் அவதூறு கருத்துகளை வெளியிட தடைவிதித்து, ஏற்கனவே பதிவு செய்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என கோரி மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.