தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி கடமாங்கால் ஏரி 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாலத்தளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 25 ஆண்டுகளாக தூர்வரப்படாமல், ஏரியின் உள்புறம் மண் சேர்ந்து, தரைத்தளம் உயர்ந்து , நீர் கொள்ளளவு குறைந்து கோடை காலத்தின் துவக்கத்திலேயே தண்ணீர் இன்றி வறண்டு போய் விடுவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்களின் வேண்டுகோள்படி மெகா பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம், கடந்த மே மாதம் 28 ம் தேதி அந்த ஏரி தூர்வாரும் பணிகளை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணைந்து துவக்கி வைத்தனர். கடந்த 48 நாட்களாக பணிகள் நடந்துவருகிறது. தற்போது வரை 80 சதவிகித பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியின் அண்ணா திமுக மாஜி ஊராட்சி மன்ற தலைவர் துரைமாணிக்கம் என்பவர் சில அதிகாரிகளை தூண்டி விட்டு வேலை செய்ய விடாமல் தடுப்பதாக கூறி அந்த பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராமத்தின் நலன் கருதி மீதமுள்ள 20 சதவிகித வேலையை முடிப்பதற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காலை நேரத்தில் நடைபெற்றதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.