மராட்டிய மாநிலம் அகில்யா நகர் மாவட்டம் வெருல் கேவ்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது மையத்தில் உள்ள ஏ.டி.எம். மெஷின் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசார் மற்றும் வங்கிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், வங்கி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு இருந்த ஏ.டி.எம். மெஷினை பெயர்த்து எடுத்து தூக்கிச்சென்றது தெரியவந்தது. அதில் ரூ.16 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரொக்கம் இருந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்துடன் ஏ.டி.எம். மெஷினை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.