மயிலாடுதுறை மாவட்டம் நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன்(30) என்பவர் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள்; ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் அறிமுகமாகி, தான் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அலுவலுகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு விரைவில் ஆட்கள் நிரப்ப இருப்பதால், அந்த பணியை தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் பணம் கொடுத்து பெற்றுத் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். ஒரு வாரத்துக்கு பின்னர் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்டது போன்ற போலி நியமன ஆணையை காண்பித்துள்ளார்.
பின்னர், தொடர்ந்து காலிப்பணியிடங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், பாலமுருகனுக்கு தெரிந்த பிற நபர்களிம் முன்பணம் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி 18 நபர்களிடம் மொத்தம் ரூ.13.15 லட்சம் தொகை பெற்றுள்ளார். பணம் கொடுத்த நபர்களின் விவரங்களை உள்ளடக்கிய அரசு பணி பதிவேடு போன்ற போலி பதிவேடுகளை தயார் செய்து, அவற்றை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்திருப்பதாகக் கூறி, அந்த போலி பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு படிக்கட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாத்துக்கு தெரியவந்த நிலையில், ஜூன் 7-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, இது தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வேலைக்காக பணம் கொடுத்திருந்த தொக்கலாக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் ஜூன் 9-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு, வரதராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
