Skip to content

ரூ.16 லட்சம் நூதன மோசடி.. தஞ்சையில் சைபர் க்ரைம் விசாரணை

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (69) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனிற்கு வாட்ஸ் அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன்னை அங்கித் மெஹ்ராவாக என்று தெரிவித்துள்ளார். பின்னர் வேல்சாமியிடம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இதற்காக ஒரு போலியான லிங்கையும் அனுப்பி உள்ளார். அதிக லாபம் கிடைப்பதை தவற விட்டு விடாதீர்கள் என்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதையடுத்து வேல்சாமி கடந்த 21.09.2025 முதல் 29.10.2025 வரை 14 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 16 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தனது லாபம் குறித்து கேட்பதற்காக வேல்சாமி அந்த வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. பலமுறை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ஸ் ஆப் என்றே வந்துள்ளது. அப்போதுதான் அந்த மர்மநபர்கள் தன்னை மோசடி செய்துள்ளதை வேல்சாமி உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேல்சாமி பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் ஒடிசா, அசாம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மாநில வங்கி கணக்குகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு சைபர் க்ரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 3 வங்கிகளில் இருந்து பதில் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!