கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிகை வெகுவாக குறைந்து விட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் பின்வருமாறு:- 31.3.2020-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது. 2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது. நாடுமுழுவதும் கைப்பற்றப்பட்ட ரூ.2,000 கள்ளநோட்டுகள் 2016 ல் 2,272 ஆக இருந்து 2017 ல் 74,898-ஆக அதிகரித்தது. அதுவே 2020 ல் 2.44 லட்சம் என உச்சம் அடைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 31.3.2020 ல் 22.6 சதவீதமாக இருந்து 31.3.2021 ல் 13.8 சதவீதமாக சரிந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 31.3.2020 ல் 274 கோடியாக இருந்து 31.3.2021 ல் 245 கோடியாக சரிந்தது. மேலும் சரிந்து 31.3.2022ல் 214 கோடியாக உள்ளது. புழக்கத்தில் உள்ள அனைத்து நோட்டுகளின் மொத்த மதிப்பு 31.3.2021 ல் ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்து 31.3.2022 ல் ரூ.31.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளதோடு புழக்கத்தில் உள்ள நோட்டுகளும் படிப்படியாக குறைந்து வருவதால் மதிப்பிழப்பை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.