Skip to content

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

  ரஷ்யா-உக்ரைன்   இடையே சுமார் 4  வருடங்களாக  போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.  இதற்காக  ரஷ்ய அதிபர் புதினை அழைத்து கடந்த 15ம் தேதி  அலாஸ்காவில்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியை நேற்று அமெரிக்காவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. . இதில், ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்கள், அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு முன்பாக  டிரம்ப்  தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ரஷ்யா உடனான போரை உக்ரைன் அதிபர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும். அவர் போரை நிறுத்த வேண்டுமென நினைத்தால் அது முடியும். இல்லாவிட்டால் அதை நீடிப்பதும் அவர் விருப்பம். அதற்கு முன் ஒன்றை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால் அந்த அமைதி நிலையானதாக இருக்க வேண்டும். முக்கியமாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிப்பதில் ஐரோப்பாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என கூறினார். இரு தரப்பிலும் கடுமையான நிபந்தனைகளுடன் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது.

சந்திப்புக்கு பிறகு  டிரம்ப் கூறியதாவது: இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளேன். அந்த சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன் ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் முடிவடையும். அது எப்போது முடிவடையும் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆனால் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஜெலென்ஸ்கி போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்.

முழு உலகமும் உக்ரைன்-ரஷ்யா போரால் சோர்வடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். நான் 6 போர்களை முடித்துள்ளேன். ஒருவேளை இது (உக்ரைன்-ரஷ்யா போர்) எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அது எளிதான ஒன்றல்ல. இது  கடினமான ஒன்று.ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் ஆறு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.

இந்த உக்ரைன்-ரஷ்யா போரை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி குறித்து விவாதிக்க புதினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு தொடங்கி உள்ளது. இது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆரம்பமாக அமையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

error: Content is protected !!