Skip to content
Home » சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர். பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று (நவ.17) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதால் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர். சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!