Skip to content

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இவர் மீது தூத்துக்குடியில் இரட்டைக் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மரோடோனாவைக் கொலை செய்த வழக்கில் மதன்குமார் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

இந்தக் கொலைக்கு பழிக்குப் பழியாக, மரோடோனாவின் ஆதரவாளர்களால் மதன்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத், அந்தோணி, சந்தோஷ், சூர்யா உள்ளிட்ட நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் விசாரணையில் ரவுடி மதன்குமாரை கொலை செய்ய 13 பேர் கொண்ட கும்பல் சேலத்திற்கு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணகாந்த், செல்வபூபதி, ரத்தினவர்ஷன், பிரவீன்ஷா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!