Skip to content

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாகத் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு, இன்று அதிகாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளங்கள் முழங்க அம்மன் மரக் கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பாகக் கொண்டு வரப்பட்டார். அங்கு கொடிமரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மாரியம்மன் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியினை கோவில் குருக்கள் காலை 7.40 மணி அளவில் தங்கக் கொடிமரத்தில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குக் காப்பு கட்டும் நிகழ்வும், கொடிமரத்திற்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழா நாட்களான இன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஜனவரி 31-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, கொள்ளிடம் வடதிருகாவேரி கரையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் வைபவம் நடைபெறுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி மகா அபிஷேகம் மற்றும் வழி நடை உபயங்களுடன் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.

error: Content is protected !!