Skip to content
Home » ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்  கோவில். இங்கு தினந்தோறும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

சமயபுரம் மாரி்யம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும்,  சித்திரைத் தேரோட்டம் மிகவும்  சிறப்பு வாய்ந்தது.  வழக்கமான உற்சாகத்துடன் இந்த ஆண்டும் கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன்  சித்திரைத் திருவிழா தொடங்கியது.  அன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம்,
ரிஷபம், யானை,சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது .திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  சித்திரை மாத  முதல் செவ்வாய்க்கிழமையான  இன்று காலை  நடைபெற்றது.  சிறப்பு அலங்காரத்துடன் அம்மன்  உட்பிரகாரம் வலம் வந்து காலை 10.25 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

சரியாக 10.31 மணிக்கு  மிதுன லக்கனத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.  மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள்  விண்ணைப்பிளக்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி, சமயபுரத் தாயே என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  தேரோடும் வீதி வழியாக  தேர்  பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வலம் வந்தது. அப்போது, பக்தர்கள் சாலையோரங்களில் நின்றும், தங்களின் வீட்டு முன்நின்றும்வீட்டு மாடிகளில் நின்றும்  அம்மனை வழிபட்டனர்.

பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் புனித நீராடி அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறம் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் அம்மனை  வழிபட்டனர்.

இந்த தேர்த் திருவிழாவை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து  பக்தர்கள்  வந்துள்ளனர்.   நம்பர் 1 டோல்கேட் முதல் கோவில் வரை பக்தர்கள்  கூட்டமாக காட்சி அளிக்கிறது. திருவிழாவையொட்டி நேற்று முதல்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக  அலகு குத்தியும், அக்கினி குண்டம் ஏந்தியும், கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனால் சமயபுரம் பக்தர்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடி வருகிறது.இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும்    விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருவிழாவையொட்டி முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர்பந்தல், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டு  வருகிறது.  திருவிழாவையொட்டி ஆயிரகணக்கான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு வியாபாரம் களைகட்டி உள்ளது.  வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் சிறப்பாக செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!