சவுதி அரேபியா நஜ்ரான் நகரில் நஜ்ரன் தமிழ் மன்றம் (NTM) சார்பில் மூன்றாவது ஆண்டு பொங்கல் 2026 விழா ஜெத்தா இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தை மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
சவுதி அரேபியாவில் உள்ள தமிழ் சமூகத்தினர் மத்தியில் உறவையும், பாரம்பரியத்தையும் பேணும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
மதியம் 3.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், கயிறு இழுத்தல், உறியடி போன்ற பாரம்பரிய

விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாகக் நடைபெற்றன. பெண்கள் ஒன்றுகூடி புதுப்பானையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் சமைத்தனர்.
விழாவின் தொடக்கமாக, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நஜ்ரன் தமிழ் மன்றத்தின் நிறுவனர் டாக்டர் உமாபதி அவர்கள் தனது உரையில், நஜ்ரன் பகுதியில்

தமிழ் சமூகத்தை ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் வளர்ச்சி குறித்துப் பேசினார். மன்றத்தின் தலைவர் டாக்டர் மகேஸ்வரி கணேசன் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில்: தைத்திருநாளின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளுக்கும் இயற்கைக்கும் நாம் செலுத்த

வேண்டிய நன்றியையும் வலியுறுத்தினார். மன்றத்தின் செயலாளர் பொறியாளர் சோனைராஜா அவர்கள் ஆற்றிய உரையில், மன்றத்தின் வருடாந்திர செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, விழாவின் தலைமை விருந்தினர் ஜித்தாவிற்கான இந்தியத் துணைத் தூதர் (Consul Genral of India, Jeddah) மாண்புமிகு திரு. ஃபஹத் அஹமது கான் சூரி அவர்கள்

காணொலி வாயிலாக மக்களிடையே உரை நிகழ்த்தி . புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் இவ்விழாவைப் பாராட்டிய அவர், பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் நமது கலாச்சாரப்

பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, சவுதி அரேபிய வாழ் இந்தியர்களிடையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடையாள உணர்வை வளர்ப்பதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விழாவின் மற்றொரு தலைமை விருந்தினராக . சவுதி அரேமியா தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு தலைவர் மரியாதைக்குறிய சாதனை தமிழன் ஜெத்தா தமிழ்ச்சங்க பொறியாளர் காஜா மைதீன் மீரான் அவர்கள் கலந்து கொன்டு விழா சிறப்புரையாற்றினார் அவர் கூறுகையில் வெளிநாட்டில் வாழும் இளைய தலைமுறைக்குத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஆழமான வேர்களைக் கடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, இச்சமூக நிகழ்வில் பிற இந்திய சமூகங்கள் மற்றும் அண்டை மாநிலத்தவர்களின் பங்கேற்பு குறித்தும் குறிப்பிட்டு, சவுதி வாழ் இந்திய சமூகத்தின் வலுவான பிணைப்பைப் பாராட்டினார்.
மேலும் சிறப்பு விருந்தினர் டாக்டர். ஜெயசங்கர் டெட்லா, அவர்கள் வெவ்வேறு மொழி பேசும் பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரே கலாச்சார நிகழ்வைக் கொண்டாட ஒன்றிணைந்த சூழலை ஏற்படுத்திய நஜ்ரன் தமிழ் மன்றத்தைப் பாராட்டினார்.
விழாவின் ஒரு பகுதியாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டுச் சிறுவர் சிறுமிகள் பலர் ஆர்வமுடன் திருக்குறளை அழகாக ஒப்புவித்தனர், இது அனைவரின் பாராட்டையும் பெற்றது. பறை ஆட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இரவு வரை நீடித்த இந்த கொண்டாட்டங்கள், பரிசளிப்பு விழாவுடன் இனிதே நிறைவுபெற்றன. நிகழ்ச்சியின் நிறைவாக திரு. முத்துக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவினை டாக்டர் ஜாய்ஸ் அவர்கள் தனது கணீரென்ற குரலாலும், அழகிய தமிழாலும் மிக நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.

