தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று தங்கள் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர்.
இதற்கிடையே, இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வந்தது. இதனால் ஒரு நாள் விடுமுறை போதாது என்பதால் நவ. 1-ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று நவ. 1-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் வீடு திரும்ப ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்த தமிழக அரசு, அன்றைய தினத்துக்குப் பதிலாக நவ. 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கவும் செய்தது.