கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் லேசகா உரசிக்கொண்டன.
இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 3-ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த பாஜக பிரமுகர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை உளுந்தூர் பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது.அந்த காரில் தாடி, தொப்பி வைத்தவர் இருந்தார் என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து, அது விபத்து என்றும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக வும் ஆதீனத்தின் கார் டிரைவர் சென்றதால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக கூறி, சிசிடிவி பதிவுகளை வெளியிட்டனர். மேலும், மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.போலீசார் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் பொய் அம்பலமானது.
இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரைத் தூண்டிவிடுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 30ம் தேதி நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆதீனம் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் வரும் 5ம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் ஆதினத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.