புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில் முருகேசன் என்பவரது வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னசத்திரம் ஜே.என்.நகரில் வசிக்கும் கதிரேசன் என்பவர் வீட்டில் 89 பவுன் நககைளும் கொள்ளை போய் உள்ளது.
கதிரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கதிரேசன் மனைவி கார்த்திகா வெளியூர் சென்று உள்ளார் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 89 பவுன் நகைகளை அள்ளிச்சென்று விட்டனர். நேற்று இரவு தான் கார்த்திகா வீடு திரும்பி உள்ளார். அவர் வந்து பார்த்தபோது தான் வீட்டில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளை நடந்த இடத்தை எஸ்.பி. அபிஷேக் குப்தா சென்று பார்வையிட்டார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
பாசில் நகரில் முருகேசன் என்பவர் வீட்டில் 160 பவுன் கொள்ளை நடந்த இடத்திற்கும் இந்த வீட்டுக்கும் 1 கி.மீ. தூரம் இருக்கும். இரண்டு இடங்களிலும் ஒரே நாளில், ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள். முருகேசன் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் போகும்போது மிளகாண்பொடி தூவிட்டு போய் விட்டனர். இங்கு அப்படி எதுவும் இல்லாததால் இது வேறு கும்பலாக இருக்கும் என்று் கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் கொள்ளை கும்பல் புகுந்து விட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.