மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் இதனை துவக்கி வைத்தார். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதுகுறித்து கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ். இணைந்து தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி
வருகின்றன. பீகாரில் மிகப்பெரிய அளவில் ஓட்டு திருட்டு நடந்ததை ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மக்கள் விரோத போக்குடன் பாஜக அரசு செயல்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை தமிழகம் முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். இதில் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் சுமார் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.