கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 7-வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் பலருக்கு சமன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தவெக பிரச்சார நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக இருந்த தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனுக்கு எஸ்.ஐ.டி குழு சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு வந்துள்ளார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பிரச்சார நிகழ்வில் பார்த்திபனின் பங்கெடுப்பு குறித்து விசாரிப்பதற்காக எஸ்.ஐ.டி குழு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
இதேபோல் பிரச்சார நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர்களும் கரூர் எஸ்.ஐ.டி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளனர். குறிப்பாக கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று 3.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.