முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வ விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மேல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு, முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வேலில், இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார். தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.