தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அவினாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைத்து நடத்திய இதில்,சூலூர் பகுதிக்கு உட்பட்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து,கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ்,மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளை ஒருங்கிணைத்த கோவை வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல் கூறுகையில், மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டிகள் நடைபெற்று வருவதாகவும்,அடிப்படையாக மண்டல அளவிலான விளையாட்டுகளை ஊக்குவித்தால் மட்டுமே நாட்டிற்கு நல்ல விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இதில் தேர்வு செய்யப்படும் அணிகள் மற்றும் வீரர்கள் அடுத்து நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர் கூறினார்.