Skip to content

ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 வைகோவின்  ராஜ்யசபா பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது.  விடைபெறும் முன் அவர்  அவையில் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற வரலாற்றில் மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர்.

நேற்று (ஜூலை 24) மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் அண்ணன் வைகோ, கலைஞரையும், கலைஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனையும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், எனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தேன். திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்களின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.

மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, மாநிலங்களவையில் மக்கள் சேவகராகச் சிறப்பாகப் பணியாற்றி, மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதை அறிந்து கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன். சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும் நீதிமன்றங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்பவுள்ளார். அவருக்கும், மாநிலங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!