அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, “வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும். இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன. வரும் 29ஆம் தேதி சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ஒருவாரத்துக்கு கனமழை நீடிக்கும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும், நாளை முதல் 28ம் தேதி வரை கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கன முதல் மிக-கனமழையும், 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன முதல் மிக-கனமழையும் பெய்யும். தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் தூத்துக்குடி, குமரியில் கனமழையும், தென்காசி, நெல்லையில் கனமழையும் பெய்யும். சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்” என்றார்.

