கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா ( 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்த வருகிறார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியை சேர்ந்த பஷீர்தீன் முகம்மது என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். உடற்பயிற்சி மாஸ்டரான அவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
பஷீர்தீன் கோழிக்கோடு எரஞ்சிபாலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்த வீட்டுக்கு மாணவி ஆயிஷா ரஷா அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும் மாணவி, காதலனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தான் வேலை பார்த்து வரும் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பஷீர்தீன் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என மாணவி ஆயிஷா கூறியிருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.
இருந்தபோதிலும் காதலியின் பேச்சை கேட்காமல் ஓணம் கொண்டாட்டத்திற்கு பஷீர்தீன் சென்றுவிட்டார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் மாணவி ஆயிஷா ரஷா தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாணவி ஆயிஷா ரஷா பரிதாபமாப இறந்து விட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை மிரட்டி அடித்ததாக அவரது உறவினர்கள், காதலன் மீது குற்றம் சாட்டினர். இதனால் மாணவியின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், “எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு” என்று கூறியிருந்தார். இதையடுத்து மாணவியின் காதலன் பஷீர்தீனை போலீசார் கைது செய்தனர்.