தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த, தனியார் பள்ளிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதன்படி அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனத்தின் நிலம், கட்டிடம் மற்றும் அந்த கல்வி நிறுவனத்தில் உள்ள வசதிகள் கல்வி சார்ந்த பணிகள் மற்றும் சார்ந்த இணை செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பள்ளி விழாக்கள் கல்வி நிறுவனத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகங்களை, பள்ளி நேரம் மற்றும் பள்ளி அல்லாத நேரங்களில், தனி நபர்கள் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கு பயன்படுத்த பள்ளிகள் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் அல்லது கருத்தியல் சார்ந்த நிகழ்வுகள், மதம் சார்பான அல்லது பிரிவினையை தூண்டும் வகையிலான நிகழ்வுகள், கல்வி நோக்கங்களுக்கு தொடர்பு இல்லாத நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகள், சமூக சேவை சார்ந்த நிகழ்வுகள், ரத்த தான முகாம்கள் போன்ற நிகழ்வுகள் அரசியல் மற்றும் மதசார்ப்பு இல்லாமல் மற்றும் கல்வி நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

