நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்தை, நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையோடு; தான் சந்தித்த சம்பவங்கள், வலிகள், தன்னுடைய புனைவுகளை சேர்த்து பைசன் படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்துக்காக துருவ் இரண்டு வருடங்கள் கபடி பயிற்சி மேற்கொண்டார். மேலும் தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ‘பைசன்’ படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்’ என்றார் சூப்பர் ஸ்டார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.