திருவள்ளூரில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிவந்தவர் எட்வர்டு வில்சன் (50) . கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு பணத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார், வீட்டில் சும்மா இருந்து கொண்டே அரசு வழங்கிய பாதி சம்பளம் வாங்கிய எட்வர்ட் வில்சன், முப்பொழுதும் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடந்ததால், டிண்டர் ஆப் மூலம் அறிமுகமான புதுச்சேரியை சேர்ந்த தோழி பிரியதர்ஷனி அழைப்பின் பேரில் வில்லாவுக்கு சென்று வில்லன்களின் கையில் சிக்கி 25 சவரன் நகையை பறிகொடுத்தார்.
வில்சனின் புகாரின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல கிட்னாப் ரவுடி ஹைகோர்ட் மகாராஜா,
பிரியதர்ஷினி என்கிற ஜோதி, தனலட்சுமி, உள்ளிட்ட 6 பேரை செம்மாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். கடத்தல் கும்பல் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய வில்சன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்தார்.
டிண்டர் தோழியிடம் அவ்வபோது மனம் விட்டு பேசிய வில்சன், கிழக்கு கடற்கரை சாலையில் தனக்கு சொந்தமாக இருக்கும் வீட்டை தற்போது மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவதாகவும், அதனை கூடுதல் வாடகைக்கு விட யோசனை கேட்டிருக்கிறார். நேரில் சந்தித்தால் விலாவரியாக பேசலாம் என்று கூற அப்படியே பிரபல உணவகத்தில் சந்தித்து பிசினஸ் பேசி மினி டிபன் முடித்து க் கொண்டு இருவரும் பிரிந்து சென்றதாக வில்சன் தெரிவித்தார்
வீட்டு வாடகை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ள செவன் ஸ்டோன் வில்லாவுக்கு வில்சனை அழைத்திருக்கிறார் பிரியதர்ஷினி. அங்கு கடந்த 17ந்தேதி காலை இன்னோவா காரில் சென்ற வில்சன், முன்னெச்சரிக்கையாக தான் அணிந்திருந்த 25 சரவன் தங்க நகை ஆபரணங்களை கழற்றி காரின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு வில்லாவுக்குள் சென்றுள்ளார். வில்சனை வரவேற்று அறைக்குள் அழைத்துச்சென்ற பிரியதர்ஷினி திடீரென மாயமான நிலையில், அறையின் குளிலறைக்குள் இருந்து பல்க்காக வந்த 4 பேர், கையில் துப்பாக்கி மற்றும் பட்டாகத்தியுடன் வில்சனை மிரட்டி அடித்து ஆடைகளை களைந்து போட்டோ எடுத்து அமரவைத்ததாக கூறப்படுகின்றது
“அரசியல் பிரமுகர் ஒருவர் உன்னை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் டீல் பேசி 50 லட்சம் கொடுத்துள்ளார். உன்னை பார்க்க பாவமாக உள்ளது”, ” பாக்கி 50 லட்சம் ரூபாயை நீ கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம், இல்லையென்றால் உன்னை கொன்று புதைத்து விடுவோம் ” என்று கூறி உள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்ததால் மற்றொரு பெண் மூலம் வில்சனுக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர்.
அரை மயக்கத்தில் இருந்த வில்சனை அவரது இன்னோவா காரிலேயே ஏற்றி கடத்திச்சென்றதாகவும், திருவிடந்தை கடற்கரையில் அரை நிர்வாணமாக வில்சனை தலைமட்டும் வெளியே ந்தெரியுமாறு புதைத்து கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் வலிதாங்காமல் பணம் தருவதாக ஒப்புக் கொண்டு, மனைவிக்கு போன் செய்து வீட்டிலிருக்கும் தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துவரும் படி சொல்வதாக கூறியுள்ளார். போலீசில் சிக்க வைக்க திட்டம் போடுகிறாயா ? என்று உஷாரான கடத்தல் கும்பல். அவரை மீண்டும் நிர்வாணமாக்கி அடித்து சித்ரவதை செய்ததோடு அவருக்கு பழைய சட்டை மற்றும் கைலியை கொடுத்து அணிந்து கொள்ள செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து தெளிவாக காணப்பட்டதால். மீண்டும் மயக்க ஊசி செலுத்த கையில் நரம்பை தேடியுள்ளனர். கையில் கிடைக்காததால் காலில் மயக்க ஊசி செலுத்தி மயக்க முற செய்ததாகவும், வில்சனை கடைசி இருக்கையில் கிடத்திய கடத்தல் கும்பல் காரை வண்டலூர் அருகே சாலையோரம் நிறுத்தியுள்ளது.
பின்னர் தான் மயக்கம் தெளிந்த பின்னர் உறவினர்கள் துணையுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்ததாக வில்சன் தெரிவித்தார். ஆனால் தனது நகைகள் எப்படி ? கொள்ளையர்கள் கைகளுக்கு சென்றது என்பது மட்டும் குழப்பமாகவே இருந்தது. காரை நிறுத்திவிட்டு செல்வதற்கு முன்பாக கடத்தல் கும்பலில் ஒருவன் அணிந்திருந்த கையுறைகளில் ஒன்றை காணவில்லை என்றும் அது போலீசாருக்கு தடயமாக கிடைத்து விடக்கூடாது என்று சல்லடை போட்டு தேடிய போது காருக்குள் மறைத்து வைத்திருந்த தனது 25 சவரன் நகைகள் அவர்களது கைகளுக்கு கிடைத்ததாக போலீசார் கூறியதாக வில்சன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் 2020 ஆண்டு 40 லட்சம் ரூபாய்க்கு வங்கி கடன் பெற்று இசிஆரில் புதிய வீடு வாங்கியதாக தெரிவித்த வில்சன் அந்த கடனை 2024 ஆம் ஆண்டே அடைத்து விட்டதாக கூறியது வியப்பை ஏற்படுத்தியது.

