சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 8-ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் எனவும் இருமொழி கொள்கையே தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,”தற்போது அமலில் உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டு முதலே ரத்து செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு நடைபெறும்” என்றார்.
அதாவது, மத்திய அரசு 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், இனி 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி (All Pass) வழங்கப்படும், மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும். இந்த மாற்றம் மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்துக்கென கல்விக் கொள்கையை உருவாக்க 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2022 ஜூலை 1-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. 14 பேர் கொண்ட குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலவர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கத.