Skip to content

அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை, எம்எல்ஏ திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் வசதி, வடிகால் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், “தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பிறகுதான் கடன் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு எதிரான நிர்வாகம்” என்று குற்றம் சாட்டினார்.100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசு இப்போது 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறியது, ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இதை பாராட்ட திமுக அரசுக்கு மனமில்லை” என்று விமர்சித்தார்.

மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் “காந்தி” பெயரே நீடிக்க வேண்டும் என்றும், ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு பரிசீலித்து குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக அரசை அகற்றக்கூடிய கட்சிகள் எல்லாம் எங்களுடன் கூட்டணி வைக்கலாம்” என்று தெரிவித்தார்.

விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்படும் என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார். ஒப்பந்த செவிலியர்களுக்கு குறிப்பிட்ட காலம் சென்றால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசு வேண்டுமென்றே வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என்றும் விமர்சித்தார்.அனைத்து ஊடக மற்றும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

error: Content is protected !!