Skip to content
Home » தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது அவசியத்திற்கு ஏற்ப 2 ஆயிரம் முகாம்கள் வரை நடத்தப்படுகிறது.

கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 8380 முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. மருத்துவத்துறையின் வரலாற்றில் வேறு எப்போது இல்லாதவகையில், தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதும், 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இந்தியா வரலாற்றிலேயே வட கிழக்கு பருவ மழைக்காக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தி தமிழக அரசு சாதனை புரியவுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த முகாம்கள் மூலம் பயனடைகிறார்கள். அதில் 400-500 பேர் நோய்வாய்பட்டவர்களாக கண்டறியப்படுகிறார்கள்.

கடந்த  2 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் உள்ள மொத்த மழைநீர் வடிகால்களில் 40 விழுக்காடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை கண்டால் சென்னை மக்கள் அஞ்சும் நிலை மாறி, இன்று மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மழை நீர் வடிகால்.கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இன்றுவரை டெங்கு காய்ச்சலால் 7059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. தற்போது வரும் இருமல் 20 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கால்வலி, தலைவலி நிறைய இருந்தது. ஒவ்வொரு துறை டாக்டர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். இப்போது பிசியோவும் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னையில் இருக்கும் ஒட்டுமொத்த நாய்களும் கணக்கெடுக்கப்படவுள்ளது. மேலும், நாய்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்படும். பொதுமக்களும் வெறிபிடித்த நாய்களை கண்டால் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும். ஒரு வெறிபிடித்த நாய் 27 நபர்களை கடிக்கும் வரை அந்த பகுதி மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தவர்கள் பயப்பட தேவை இல்லை. முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!