Skip to content

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி  கிடைத்ததும், கூடவே யார் பெரியவர் என்ற ஈகோவும் வந்தது. இதனால் கட்சி பணிகள் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த  திமுக மேலிடம் டிகேஜி நீலமேகத்திடம் இருந்த  நகர செயலாளர் பதவிை பறித்து மேயர் சண் ராமநாதன் வசம் கொடுத்தது.

தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் திமுக மட்டும் தனித்து 36 வார்டுகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் அதிமுக 7 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.  தனி மெஜாரிட்டி இருப்பதால்  சண் ராமநாதன் தஞ்சை மாநகராட்சி வளர்ச்சி பணிகளில்  தீவிர கவனம் செலுத்துவதுடன்,  மாநகராட்சியில் பல்வேறு முன்னோடி திட்டங்களையும் செயல்படுத்துகிறார்.

தஞ்சை மாநகராட்சியில் 90% சாலைப் பணிகள்  முடிவடைந்துள்ளது. ; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கிறார். இதனால் தனிப்பட்ட முறையில்  சண் ராமநாதன்  மக்களிடம் நல்ல  வரவேற்பு பெற்றிருக்கிறார். எளிதில் அணுக கூடிய நபராகவும் இருப்பதால்  குறைகள்  சொல்லப்பட்டவுடன் களையப்படுகிறது.

குளங்கள் தூர்வாருதல், அடிப்படைக் கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றை சிறப்பான முறையில் மேற்கொண்டதால், மக்களிடையே அவருக்கான நன்மதிப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில்   தஞ்சை மாநகரச் செயலாளராக அவர் பொறுப்பேற்ற நாள் முதல்,  திமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அனுசரித்து  கட்சி பணியும் ஆற்றி வருகிறார்.

தஞ்சை மாநகர தந்தை என்ற பொறுப்பிலும், நகர செயலாளர் என்ற பொறுப்பிலும் அவர்  சிறப்பாக இருப்பதால், அடுத்த முறை  தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில்  அவருக்கு சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.  முதல்வர் வருகையின்போது  இவர் அளிக்கும் வரவேற்பை பார்த்து  எதிர்கட்சிகளே அசந்து போய்விட்டனவாம். இது தற்போதைய எம்.எல்.ஏவான டிகேஜி நீலமேகத்திற்கு  அதிர்ச்சியை கொடுத்துள்ளதுடன், தனது நகர செயலாளர் பதவியை பறித்து விட்டார்கள். எம்.எல்.ஏபதவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற நிலையில் உள்ளார்.

இதனால்  நீலமேகத்தின்  ஆதரவாளர்கள் மாநகராட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 4ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம்  மேயர் மீது பல பிரச்னைகளை எழுப்பவும், அடுத்த கட்டமாக  மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமா என்பது குறித்தும் ஆலோசிப்பதாக தஞ்சை நகர திமுகவில்  பரபரப்பான அரசியல் டாக் ஓடுகிறது. இது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கும், மாவட்ட செயலாளருக்கும் புகார் சென்று உள்ளது. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்  கட்சி நிர்வாகிகளை அழைத்து  உள்கட்சிக்குள் எந்த பிரச்னையும் ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்தும் உள்ளாராம். ஆனாலும் பிரச்னை தீரவில்லை.

பிரச்னை எல்லை மீறி போனால் மேலிடத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தஞ்சை திமுகவினர் பரபரப்புடன் பேசிக்கொள்கிறார்கள்.

 

error: Content is protected !!