Skip to content

 2 வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் த.வெ.க

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், நடிப்பில் இருந்து விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரே அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முதல் மாநாட்டில், தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார். ஆனாலும் எந்த கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதே சமயம், அ.தி.மு.க. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வரவில்லை என்றாலும், த.வெ.க தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். அடுத்து புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் விரைவில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இதற்கிடையே சேலம், வேலூர், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை நடத்திய அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (மார்ச் 4) தஞ்சையில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார்

இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் செய்யும் நடவடிக்கையை தலைவர் விஜய் தொடங்க உள்ளார். ஏற்கனவே தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விஜய் முடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு 2 வாரங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!