கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி 55. இவர் மாயனூரில் உள்ள டான்சம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த போது அருகில் இருந்த தனியார் டவர் வேலியின் இரும்பு கம்பியை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தபோது மருத்துவர்கள் இறந்ததாக கூறியதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. லாலாபேட்டை போலீசாரம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இதுகுறித்து தனியார் டவர் அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் அவர்கள் மெத்தனபோக்குகளும் அலட்சிய போக்குடனும் பதில் அளித்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் தனியார் டவர் அதிகாரிகள் இங்கு வரும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மகாதானபுரம் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கிலும், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திருச்சி கரூர் சர்வீஸ் சாலை முன்பும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனியார் டவர் அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதனை தொடர்ந்து மகாதானபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் அமைதி பேச்சு வார்த்தையில் நடத்தி உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து அங்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.
ஆனால் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள உறவினர்கள் தனியார் டவர் அதிகாரிகள் இங்கு நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுத்து வருகின்றனர்.
