Skip to content

ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்…ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர், ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் வரும் ஜனவரி 6 ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். அத்துடன், வருகிற 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்த மாநாடு நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!