Skip to content

பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார்.

அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு இடத்தில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது பவுடரை கொட்டி வெடிமருந்து வைத்து வெடிக்கச்செய்கிறார். அது வெடித்துச்சிதறுகிறது.

அதன் வீடியோவை பதிவேற்றம் செய்தார். அதன்பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் முன் நடந்து வருவதை போன்று ஒரு வீடியோ பதிவு செய்தார். அவர் நடந்து வரும்போது ஒரு சினிமாவில் வரும் வசனமான `நம்மால அவனை தொடக்கூட முடியாது சார்.. இந்த ஏரியாவுல அவன் தான் பெரிய கை..’ என போலீசார் கூறுவார்கள். அதனை போலீஸ் நிலையம் வெளியே நடந்து வரும் குமரேசன் இணைத்து வசனத்தை காட்சி படுத்தியிருப்பார்.

பெட்ரோல் குண்டு வெடித்த இடம் மற்றும் போலீஸ் நிலையம் முன் நடந்து வரும் இடம் என இரண்டும் வெவ்வேறு என்றாலும் அதனை ஒன்றாக இணைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ வைரலானது. இதன் மூலம் அனைவரையும் கவர்ந்ததாக கருதி கடந்த 4 நாட்களாக `கெத்து’ காட்டி வந்ததாக கூறப்படும் குமரேசனை போலீசார் நேற்றுமுன்தினம் `கொத்தாக’ தூக்கினர்.

அவர் மீது வழக்குப்பதிந்து திருப்பத்தூர் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரித்த நீதிபதி, குமரேசனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் நிலையை அறிந்து சொந்த ஜாமீனில் விடுவித்தார். அதன்பின்னர் ஜோலார்பேட்டை போலீசார் இதுபோல் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்வது தவறு எனக்கூறினர். அதனை குமரேசன் ஏற்று மன்னிப்பு கேட்கும் வகையில் நேற்று போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோ பதிவு செய்துள்ளார்.

அதில், `பப்ளிக்கிடம் மாஸ் செய்வதுபோல் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தேன். இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு செய்தது தவறு. என்னைப்போல் யாரும் செய்யவேண்டாம். எனவே இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.’ என அதில் பேசியுள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!