Skip to content

நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்ட ஆகாஷ், அதன் பிறகு முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை. நாய் கடித்த விவரத்தையும் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷின் செயல்பாடுகள் விசித்திரமாக இருந்துள்ளன. அவர் நாய் போலக் கத்துவது, தரையில் சுருண்டு படுப்பது போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், ஆகாஷுக்கு ‘ரேபிஸ்’ நோய் தீவிரமாகப் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

தெரு நாய் கடித்ததைச் சாதாரணமாக நினைத்து முறையான ஊசி செலுத்திக் கொள்ளாததால், ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!