Skip to content

தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த சலீம் முகமது (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.ஈ., முடித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. பின்னர் சலீம் முகமதுவை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் தன்னை ராஷ்மிகா சர்மா என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் சலீம் முகமதுவிடம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு போலியான லிங்கையும் அனுப்பி உள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என்று கேன்வாஸ் செய்துள்ளார். இதையடுத்து சலீம் முகமது கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9.63 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று சலீம்முகமதுவிற்கு ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகை வரவில்லை. இதுகுறித்து சலீம் முகமது அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சலீம் முகமது ரூ.9.54 லட்சத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சலீம் முகமது பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 11 வங்கிகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!