Skip to content

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாமக கட்சியின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் பாமக கட்சியின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கட்சியின் பொதுசெயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்து விட்டது என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன்பு ஆஜராகி, தங்கள் தரப்பில் கேவியேட் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே தடையை நீக்கக் கோறும் மனுவை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ,தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ன செய்யப்போகிறீர்கள்? தந்தை மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணனை வழக்கில் இணைத்தால் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி, ஆவணங்களை எதிர்மனுதாரர் வழங்க கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கையும் நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!