நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும், கலாசார செழிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் (Kartavya Path) குடியரசு தின கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தச் சிறப்பான நிகழ்வைக் கண்டுகளித்தனர். விழாவில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை விளக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் கண்கவர் விமான சாகசங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டையொட்டி சிறப்பு நிகழ்வுகளும் இன்று அரங்கேறின.
விழா நிறைவடைந்ததும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளைத் தளர்த்திய பிரதமர் மோடி, கடமைப் பாதையில் திடீரென சிறிது தூரம் நடந்து சென்றார். பொதுவாகப் பிரதமரின் பாதுகாப்பு கருதி கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் அவர் பொதுமக்களை நோக்கிச் சென்றார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் உற்சாகத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘மோடி மோடி’ என முழக்கங்களை எழுப்பினர். இருக்கைகளில் அமர்ந்திருந்த மக்கள் மற்றும் குழந்தைகளை நோக்கிப் பிரதமர் கையசைத்துத் தனது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கடமைப் பாதையின் மற்றொரு பகுதிக்கும் சென்ற அவரைப் பொதுமக்கள் தேசியக் கொடியை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர். அங்கு நின்றிருந்த சிலர் பிரதமருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
மக்களின் அன்பை ஏற்றுக்கொண்டு சிறிது தூரம் நடந்த பிறகு, பிரதமர் மீண்டும் தனது காரில் ஏறிச் சென்றார். அப்போதும் காரில் இருந்தபடி பொதுமக்களை நோக்கி கையசைத்தார். கடந்த 2015-ம் ஆண்டு முதலே குடியரசு தின விழாவின் இறுதியில் பிரதமர் மோடி இவ்வாறு பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி மக்களிடையே நேரில் சென்று வாழ்த்துவது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

