Skip to content

வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து வருதல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டார்கள்.

பக்தர்களின் வசதிக்காகத் திருச்சி பிஷப் ஹீபர் சாலையிலிருந்து வயலூர் முருகன் கோவில் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையின் இருபுறமும் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. மதியம் 1:30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு, அருகில் உள்ள அதவத்தூர் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இரவு 7:30 மணிக்கு மேல் வயலூர் மற்றும் வடகாபுத்தூர் புத்தூர் தைப்பூச மண்டபங்களில் சுவாமி தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான 5 ஊர் சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 2, திங்கட்கிழமை) காலை 10 மணிக்குச் சோமரசம்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் குமார வயலூர் முத்துக்குமாரசுவாமி, காசி விசுவநாதர், அல்லித்துறை பார்வதி ஈஸ்வரர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் மற்றும் உய்யக்கொண்டான் உஜ்ஜீவிநாதர் ஆகிய 5 ஊர் சுவாமிகளும் ஒன்றாகச் சங்கமிக்கின்றனர். இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் அந்தந்த ஊர் சுவாமிகள் சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபப் படிகளில் தங்கி இரவு வரை பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர்.

அன்று இரவு 7:45 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முத்துக்குமாரசுவாமி, அல்லித்துறை மற்றும் சக்தி நகர் வழியாக அதவத்தூர் தைப்பூச மண்டபத்தை அடைந்து அங்கு இரவு தங்கி அருள் பாலிக்கிறார். நிறைவு நிகழ்ச்சியாக, பிப்ரவரி 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அதவத்தூர் கிராமங்கள் வழியாக வழிநடை உபயமாகச் செல்லும் முத்துக்குமாரசுவாமி மீண்டும் வயலூர் கோவிலைச் சென்றடைகிறார்.

error: Content is protected !!