காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரபலமானது. இங்கு சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் இதர விவரங்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ‘கோவில் வழிகாட்டிகள்’ என்ற பெயரில் பக்தர்களை சிலர் கோவில் உள்ளே அழைத்துச் சென்று பூஜை, பரிகாரம் உள்ளிட்டவற்றை செய்து தருவதாக கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர் இன்று கோவில் வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு பக்தர்களிடம் பணம் பெற்ற கோவில் ஊழியர்கள் 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கோவில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டண தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எள் தீபம் வழங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பக்தர்கள் தீபம் ஏற்றமுடியாமல் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

