சினிமாவில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம், சில நாட்களுக்கு முன்பு தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலர், “இவருக்கு என்ன ஆயிடுச்சு?”, “ஏன் இப்படி வீல் சேரில் உட்கார்ந்து ஆடுறார்?” என்று கவலையோடு கேள்வி எழுப்பினார்கள். ஒருகாலத்தில் திரையில் அட்டகாசமாக அடித்து நொறுக்கிய பொன்னம்பலத்தின் இந்த நிலை, ரசிகர்களை மனதளவில் பாதிக்க வைத்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அந்த வீடியோக்கு பின்னால் இருக்கும் வலியை பொன்னம்பலம் மனம் திறந்து கூறியுள்ளார். “அன்னைக்கு நான் அப்படியே ஆடுறதுக்கு காரணம் என்னுடைய அக்காவின் இறப்பு தான். என்னுடைய வாழ்க்கையில, எல்லா நேரங்களிலும் எனக்கு துணையா இருந்தது என் அக்காதான்.
நடிகர் பொன்னம்பலத்தின் வருத்தம் அம்மாவிடத்தில் என்னை பார்த்துக்கிட்டதும் அவங்க தான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ‘விடுடா, எல்லாம் பாத்துக்கலாம்’ன்னு எனக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லுவாங்க. ஆனா அவங்க திடீர்னு அந்த நாள்காலையில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாங்க. அந்த செய்தி கேட்டதும் என்னால அந்த வலியை எப்படி வெளியே சொல்லனும்னு தெரியல. அந்த சோகம் கொஞ்சமாவது குறையணும்னு தான் நான் அன்னைக்கு ஆடினேன்” என்று கண்ணீர் அடங்கும் குரலில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து, “உண்மையிலேயே என்னால வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடவே முடியல. உடம்பு முழுக்க வலி. ஆனாலும் அந்த மன வேதனையோட என்ன செய்யறதுன்னு தெரியாம, மேளத்தை அடிக்க சொல்லி எப்படியோ ஆடினேன். ஆடி முடிச்ச பிறகு தான் மனசுல இருந்த வலி கொஞ்சம் குறைஞ்ச மாதிரி தோணிச்சு” என்று அந்த தருணத்தின் வலியை பகிர்ந்துள்ளார்.
பொன்னம்பலத்தின் தனிமை தன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பொன்னம்பலம் உருக்கமாக பேசினார். “நான் சின்ன வயசிலிருந்தே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன். என் மனைவிக்கு சினிமா சூழல் பிடிக்காது. முன்னாடி அவங்க என்னை கூப்பிட்டா நான் போயிடுவேன். இப்போ அவங்க கூப்பிட்டா வருவாங்க. ஆனாலும் என்னைப் பார்க்க நாலு பேர் வருவாங்க, என்ன ஆச்சுன்னு விசாரிப்பாங்க. அதைப் பார்த்து அவங்க சங்கடப்படக் கூடாதுன்னு தான் நான் தனியா இருக்கிறேன்” என்று கூறினார்.
சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு சிறுநீரக ஆபரேஷன் முடிந்த பிறகு, தான் எந்த அளவுக்கு உடல் ரீதியாக கஷ்டப்பட்டேன் என்பதையும் அவர் மனம் திறந்து சொன்னார்.”ஆபரேஷனுக்கு அப்புறம் கொஞ்ச நாள் படுத்த படுக்கையா இருந்தேன். பாத்ரூம் போக கூட ஒருத்தர் தூக்கி உட்கார வச்சா தான் முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமா இருந்தது. இப்போ கொஞ்சம் எழுந்து உட்கார்ற அளவுக்கு வந்திருக்கேன்.
இப்போ என் கூட மனைவி, பிள்ளைங்க யாரும் இல்ல. அப்பப்போ போன் பண்ணி பேசுவாங்க. அவ்வளவு தான்” என்று சொல்லும் போது, அவருடைய வார்த்தைகளில் இருக்கும் தனிமை ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. ஒருகாலத்தில் திரையில் பயமுறுத்திய வில்லனாக இருந்த பொன்னம்பலம், இன்று வாழ்க்கையின் கடினமான தருணங்களை அமைதியாக எதிர்கொண்டு வருகிறார். வைரலான அந்த நடன வீடியோக்கு பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கும் என்று தெரிந்த பிறகு, அவரைப் பற்றிய பார்வை ரசிகர்களிடையே முற்றிலும் மாறியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில், “பொன்னம்பலம் சீக்கிரம் முழுமையாக குணமடைந்து மீண்டும் சினிமாவில் வர வேண்டும்” என்று வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

